பாதுகாப்பான சூழலை உண்டாக்குதல்


தலைப்பு: பாதுகாப்பான சூழலை உண்டாக்குதல்:

லூக்கா 15: 8-9, "காணாமல் போன காசை (நாணயம்) பற்றிய உவமை" 10 நாணயங்கள் என்பது மனிதர்களின் கடமையை குறிக்கிறது. சமுதாயத்தை மாற்ற, சீர்திருத்த, மறுமலர்ச்சி கொண்டு வர தேவன் மனிதர்களை பயன்படுத்துகிறார்.

"புத்திசாலியான முட்டாள்" கதையில் ஒரு மனிதன் காணாமல் போன தனது மோதிரத்தை கூடாரத்தின் வெளியே தேடினான் ஏனென்றால் கூடாரத்தின் உள்ளே வெளிச்சம் இல்லயாம்... அநேகர் புரிந்து கொள்ளுதலையும், நம்பிக்கையையும், ஆரோக்கியத்தையும் கடவுள் இல்லாமல் தேடிக்கொண்டிருக் கின்றனர்.

இயேசு ஒரு சீர்திருத்தவாதி: நலிவடைந்தவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உண்டாக்கினார். அவர் நாட்களில் புறஜாதிகள் (யூதர் அல்லாதவர்), பெண்கள், பாவிகள், நோய்வாய்ப்பட்டோர் பாதுகாப்பான சூழலை அனுபவிக்க முடியவில்லை. எனவே இயேசு ஒரு சீர்திருத்தவாதியாக பாதுகாப்பான சூழலை அவர்களுக்கு உண்டாக்கினார். இன்றும் அநேகர் புரிந்துகொள்ளப்படாமல், நம்பிக்கையின்றி/பயத்துடன், வியாதி/துன்பத்துடன் வாழ்கிறார்கள் இன்று நாம் இயேசுவின் இடத்தில் இருந்து இதை செய்ய வேண்டியது நமது கடமையாகும். (மத்தேயு 11:28)

1. புரிந்துணர்வு என்னும் சூழலை உண்டாக்குதல்:

யோவான் 4:1-42, "சமாரிய பெண்மணி" அவள் யாராலும் புரிந்துகொள்ள முடியாத சூழலில் வாழ்ந்தாள். இயேசு அவளிடம் பேசுவது கனவிலும் நடக்க இயலாத காரியம். அவள் ஒரு சமாரியராக, பெண்ணாக, பாவியாக இருப்பதால் ஒரு யூதனால் புரிந்து கொள்ளவே முடியாது. அவளது சொந்த சமுதாயமே அவளை வெறுத்தது அதனால்தான் அவள் மதிய நேரத்தில் தண்ணீர் மொண்டுகொள்ள வருகிறாள், ஊரில் யாரும் பேசுவதில்லை, ஐந்து கணவர்கள்.... etc அவளுக்கு அப்போதைய தேவை யாரவது புரிந்துகொள்ள மாட்டார்களா என்பது.

ஆனால் இயேசு அவளை புரிந்துகொண்டார் காரணம்... அவர் பார்வையில் சமாரியர்கள் யூதருக்கு சமமானவர்கள், பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள், பாவிகள் தேவனால் நேசிக்க படுபவர்கள், தேவன் பார்வையில் யாரும் வெறுக்கப்பட வேண்டியவர்களில்லை.

மாற்றம்: பாதுகாப்பான சூழலை உணர்ந்த அவள் ஊருக்குள் சென்று மற்றவர்களை இயேசுவிடம்  அழைத்து வந்தாள் (வ.39), மற்றவர்கள் முன் தைரியமாய் தோன்றினாள். நாம் மற்றவர்களுக்கு அவர்களின் மதிப்பை குறித்த புரிந்துகொள்ளுதலை ஏற்படுத்துகிறோமா? அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உண்டாக்குகிறோமா?

2. நம்பிக்கை என்னும் சூழலை உண்டாக்குதல்:

யோவான் 8:1-11, "விபச்சாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்மணி" நம்பிக்கை இழந்த நிலையில், மரண பயத்தில், பாவத்தில் இருக்கும் மக்களுக்கு நம்பிக்கை என்னும் பாதுகாப்பான சூழலை உண்டாக்க வேண்டும். இந்த பெண் விபச்சாரத்தில் கண்டுபிடிக்கபட்டதாக இயேசுவின் முன்பாக கொண்டு வரப்பட்டாள். மோசேயின் சட்டப்படி விபச்சாரம் செய்யும் ஆணும், பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும். (லேவி.20:10) அனால் இங்கே ஒரு பெண் மட்டுமே கொண்டுவரப்பட்டாள், அங்கிருந்த ஆண்  எங்கே? அப்பெண் மரண பயத்தில், நம்பிக்கை இழந்த சூழலில், இயேசுவின் தீர்ப்புக்காக நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு அப்போதைய தேவை நம்பிக்கை.

இயேசுவின் நம்பிக்கையான தீர்ப்பு: அவர்கள் ஓயாமல் அவரிடம் கேட்டபோது இயேசு கூறியது, "உங்களில் பாவமில்லாதவன் முதலில் கல்லெறியக்கடவன்." என்று கூறினார் (வ.7). இயேசு ஒருவேளை கல் எறிந்திருக்கலாம் ஏனெனில் அவர் பாவமில்லாதவர், அவர் சொன்னார், "நானும் உன்னை ஆக்கினைக் குள்ளாய் தீர்க்கவில்லை, இனி பாவம் செய்யாதே என்றார்." நம்பிக்கையின்மையின் நடுவில் இயேசு நம்பிக்கை ஏற்படுத்தினார்.

மாற்றம்: அப்பெண் இயேசுவின் சீடராகி பணிசெய்தாள். நீங்கள் கிடைக்கும் வாய்ப்புகளில் நம்பிக்கை இழந்த மக்களுக்கு / பயத்தில் இருக்கும் ஜனங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறீர்களா?

3. ஆரோக்யம் (சுகம்) எனும் சூழலை உண்டாக்குதல்:

லூக்கா 8:43-48, "12 ஆண்டுகள் ரத்த போக்கினால் அவதியுற்ற பெண்மணி" வியாதியின் கொடுமையால், சரீரத்தில், மனநிலையில், உணர்வுப்பூர்வமாக அவதியுற்ற பெண்மணி. இவள் பெண் என்பதாலும், 12 ஆண்டு இரத்தப்போக்கு வியாதியால் அவதியுற்றதாலும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டாள். மோசேயின் சட்டப்படி அவள் தீட்டுள்ளவள் (லேவி 15:19). அவளுக்கு அப்போதைய தேவை சரீரத்திலும், உணர்வுபூர்வமாகவும் ஆரோக்கியம் (சுகம்).

இயேசு கொடுத்த ஆரோக்கியம்: இயேசு அவளது வியாதியை கண்டோ, மோசேயின் சட்டம் பார்த்தோ அவளை புறக்கணிக்கவில்லை. அவளது அனைத்து வெளிப்புற, உள்ளான காயத்திலிருந்தும் அவளை சுகமாக்கினார். "மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ" என்று அவளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தினார்.

மாற்றம்: அவள் சுகமானபின்பு தைரியமாக - சமாதானத்தோடே போனாள். நீங்கள் கிடைக்கும் வாய்ப்புகளில் காயப்பட்ட மக்களுக்கு ஆரோக்கியம் (சுகம்) என்னும் சூழலை ஏற்படுத்துகிறீர்களா?

கிறிஸ்துவை பின்பற்றும் நாமும் பாதுகாப்பான சூழலை (புரிந்துணர்வின்மூலம், நம்பிக்கையால், ஆரோக்கியத்தால்) மற்றவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

சிந்தனைக்கான கேள்விகள்:
a) இன்றைய தியானத்தின்மூலம் நீங்கள் உணர்த்தப்பட்ட காரியம் என்ன? நீங்கள் எவ்வாறு மற்றவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உண்டாக்கமுடியும்?
b) நான் (புரிந்துணர்வின்மூலம், நம்பிக்கையால், ஆரோக்கியத்தால்) பாதுகாப்பான சூழலை உண்டாக்க விரும்பும் ஒரு நபர் யார்?
c) சமுதாயமாக நாம் எவ்வாறு (ஆபத்தில் உள்ளவர்களுக்கு) பாதுகாப்பான சூழலை உண்டாக முடியும்?
d) நாம் கேட்பதுடன் நிற்கிறோமா அல்லது செயல்பட விரும்புகிறோமா? "கிரியை இல்லாத விசுவாசம் செத்தது" (யாக்கோபு 2:17,26)



0 comments:

Post a Comment